Shri Lalitha Sahasranaman- Namam1

ஹரி ஓம்

ஸ்ரீ மஹா கணபதயே நமஹ

ஸ்ரீ மாத்ரே நமஹ

ஸ்ரீ குருப்யோ நமஹ

அகிலாண்ட கோடி ஜனனி ஸ்ரீமாதா லலிதாம்பிகையின் லீலைகளில் ஒன்றான இந்த சிறு புழுவின் ஜனன காரணமாகிய தேவி அன்னை லலிதாம்பிகையின்  திருவடிகளை சேவித்து, என்னை ஈன்ற தாய் தந்தையரை வணங்கி இந்த சிறு அர்ப்பணிப்பை காணிக்கையாக்குகின்றேன்.ஏதும் அறியாமல் மூடனாய் திரிந்து கொண்டிருந்த என்னையும் தேர்ந்தெடுத்து இவ்வறிய பொக்கிஷத்தை விளக்கி வழிநடத்தும் குருமண்டல குருமார்களையும் வணங்குகின்றேன்.

ஸ்ரீஅகத்தீஸ்வராய நமஹ ஸ்ரீமாதா லோபமுத்ராய நமஹ.
ஸ்ரீகுருமண்டல குருப்யோ நமஹ ஸ்ரீமஹா பெரியவா சரணம்.

நாமம் 1: ஸ்ரீமாதா

“ஸ்ரீ” என்னும் சொல் பிரகாசத்தைக் குறிக்கக் கூடிய ஒரு சமஸ்கிருத சொல்லாகும். “ஸ்ரீ” என்னும் சொல் மஹாலக்ஷ்மியைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். “ஸ்ரீ” என்னும் சொல் மஹாசரஸ்வதியின் ஸ்வரூபமாகவும் கொள்ளலாம். “ஸ்ரீ” எனில் பொருட்செல்வம், அருட்செல்வம், கல்விச்செல்வம், அழகு, வெற்றி, ஞானம், வேதம் மற்றும் முக்தி இவை அனைத்தையும் குறிக்கும் ஓர் அற்புத சொல்லாகும். “ஸ்ரீ” என்ற வார்த்தையை இறைவனின் பெயரை சொல்லும் முன் இணைத்து பயன்படுத்துவது நமது இந்திய மரபு. “ஸ்ரீனிவாஸன்” என்பது பெருமாளைக் குறிக்கக் கூடிய ஒரு சொல். “ஸ்ரீ மஹாலக்ஷ்மி” என்று மஹாலக்ஷ்மி தேவியை நாம் குறிப்பிடுகின்றோம். இதே ஸ்ரீ என்ற சொல்லை மனிதர்களின் பெயர்களுக்கு முன்பாகவும் பயன்படுத்தும் ஒரு வழக்கம் நம்மிடத்தில் உண்டு. ஸ்ரீ என்பது திரு அல்லது திருமதி என்னும் அர்த்தத்தோடு “ஸ்ரீமான்” என்று ஆண்களையும். “ஸ்ரீமதி” என்று பெண்களையும் குறிப்பிடுவதாகக் கொள்ளலாம்.

இப்பொழுது இந்த ஸ்ரீ என்கின்ற வார்த்தை ஒரு பிரகாசத்தையும் அந்த பிரகாசத்தின் விமர்சத்தையும் அதாவது ஒளியும், அந்த ஒளியின் தோற்றமும், தோன்றும் ஒளியிலிருந்து வரும் பிரகாசமும் அனைத்து திசைகளிலும் பரவக்கூடியது என்கின்ற அர்த்தத்தோடு குறிப்பிடப்படும் ஒரு உன்னதமான வார்த்தையாகும்.

இப்பொழுது இந்த ஸ்ரீ என்கின்ற வார்த்தை ஒரு பிரகாசத்தையும் அந்த பிரகாசத்தின் விமர்சத்தையும் அதாவது ஒளியும், அந்த ஒளியின் தோற்றமும், தோன்றும் ஒளியிலிருந்து வரும் பிரகாசமும் அனைத்து திசைகளிலும் பரவக்கூடியது என்கின்ற அர்த்தத்தோடு குறிப்பிடப்படும் ஒரு உன்னதமான வார்த்தையாகும்.

இவைதவிர ஸ்ரீ என்பது “ஆத்மா” என்று பொருள்படும் ஒரு வார்த்தையாகும். “ஸ்ரீவித்யா” என்பது ஆத்ம வித்யாவாகும். எனவே இவ்விடத்திலே ஸ்ரீமதா என்கின்ற பெயரை சொல்லும் போது இத்தனை அர்த்தங்களையும் அது உள்ளடக்கி இருக்கின்றது. இந்த ஸ்ரீ என்ற வார்த்தையிலே மற்றும் ஒரு விஷயத்தை நாம் இங்கு கவனிக்க வேண்டும். தேவியின் வழிபாடு என்பது “ஸ்ரீபஞ்சகம்” என்று அழைக்கப்படுகிறது.ஸ்ரீநகரம். ஸ்ரீசக்ரம், ஸ்ரீஸூக்தம், ஸ்ரீவித்யா, ஸ்ரீகுரு.

“ஸ்ரீ” என்பது வேத்ததையும் குறிக்கும். வேதங்கள் ப்ரஹ்மனிடத்தில் இருந்து தோன்றியவை என்பதால் ஸ்ரீமாதா லலிதாம்பிகையே வேத மாதாவாகவும் ஆகின்றாள். “மாதா” என்பது அன்னையைக் குறிக்கும் சொல். ஒரு குழந்தை பிறந்தவுடன் அழைக்கும் சொல் மா (மாதா).

வாக்தேவிகள் லலிதாசகஸ்ரநாமத்தில் அன்னையின் பெயரை கடைசி நாமமாகத்தான் குறிப்பிடுகின்றனர். முதல் நாமம் மாதா என்பது அன்னை. அன்னை என்றால் லௌகீக அன்னையை விட மிக மிக மேலான அன்னை என்னும் பொருளில் ஸ்ரீமாதா என்று அழைக்கின்றார்கள். “மாதா” என்ற இந்த ஒரு சொல்லிலேயே அன்னையின் அனைத்து அம்சங்களும் அடங்கிவிடுகின்றது. எனவே தான் முதல் பெயராக ஸ்ரீமாதா என்றும் கடைசி பெயராக அன்னையின் நாமமாகிய ஸ்ரீலலிதாம்பிகை என்றும் வாக்தேவிகள் இவ்விடத்தில் நமக்கு அளித்திருக்கின்றார்கள்.

மாதா என்ற சொல், அன்னை என்ற சொல், அம்மா என்ற சொல்லக்கூடிய ஒர் சொல் இங்கு ஒரு விஷயத்தை நாம் கவனித்து பார்க்கும் பொழுது ஒருவன் துன்பத்தில் இருக்கும் பொழுது, வலியில், வேதனையில் இருக்கும்பொழுது அம்மா என்று அவனையும் அறியாமல் அழைப்பதை நாம் காண்கின்றோம். லௌகீக அன்னை உயிருடன் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி அவனது வாயில் முதலில் துன்ப நேரத்தில் வரக்கூடிய வார்த்தை அம்மா என்பது. இந்த நேர்த்திலே சிந்தித்து பார்த்தோம் என்றால் அவன் அழைப்பது நமது தெய்வீக அன்னையைத் தான். ஏனென்றால் லௌகீகத்தாய் சில நேரங்களிலே செயலற்று போய் விடுகின்றாள். லௌகீகத்தாயால் தீர்க்க முடியாத துன்பங்கள் இருக்கும் பொழுதோ அல்லது அவளை அணுக முடியாத நிலையில் இருக்கும் பொழுதோ நாம் அழைப்பது தெய்வீக அன்னையை மட்டுமே. லௌகீகத்தாயால் ஒரு குறிப்பிட்ட எல்லை வரை மட்டுமே செயல்பட முடியும். அதற்கு மேல் அவனிடத்தில் இருந்து துன்பத்தை நீக்கக் கூடிய சக்தி படைத்தவள் நமது அன்னையாகிய லலிதா திரிபுரசுந்தரியே.

எனவே ஸ்ரீமாதா என்று சொல்லும் பொழுது அன்பும், கருணையும் எனது எல்லா துன்பங்களையும் நீக்கி மட்டற்ற வாழ்வு அளிக்கும் எனது அன்னையே என்று இவ்விடத்திலே நாம் வணங்குகின்றோம். துர்வாச முனிவர் தனது சக்தி மஹிம்நா ஸ்தோத்திரத்தில்  கூறுகின்றார் “எத்தனையோ பிறவிகளில் எனக்கு எத்தனையோ அன்னைகள் உண்டு. எனினும் தெய்வீக அன்னையே உன்னை சரணடைந்தேன். இந்த சரணாகதியானது எனக்கு மரணமில்லா பெருவாழ்வை அளிக்குமாக. அதாவது முக்தியை அளிக்குமாக” துன்பமில்லா வாழ்வு என்பது, மரணமில்லா பெருவாழ்வு என்பது இந்த ஜனன, மரண சுழற்சியில் இருந்து விடுபட்டு அன்னையின் பாதங்களிலே சரணாகதி ஆவதாகும்.

இந்த இடத்திலே நாம் அனைத்து தோற்றங்களுக்குள்ளாகவும் சக்தி மயமாக இயக்கம் கொண்டு இருப்பது நமது தெய்வீக அன்னை ஸ்ரீமாதா என்ற விளக்கத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அனைத்து உருவாக்கங்களும், உருவாக்கங்களின் மூலமும் அன்னையே. இப்பொழுது இந்த பிரபஞ்ச ஆற்றல் பிரபஞ்ச வ்யாப்ய சக்தி என்பதை “ஸர்வ வ்யாபி” என்று பொருள் கொள்ள வேண்டும். இங்கு ஆதிசக்தி, பராசக்தி, சித்சக்தி இப்படி பல வார்த்தைகளினாலே நாம் அன்னையக் குறிப்பிடுகின்றோம். அனைத்து பொருள்களின் ஊடாகவும், அனைத்துக்குள்ளாகவும், புறம்பாகவும், எல்லாவற்றிற்குள்ளும், எல்லாமாகவும் இருந்து இயக்கும் சக்தியே அன்னை ஆதிபராசக்தி. அனைத்துத் தோற்றங்களிலும் சக்தி மயமாக இருப்பவள் அவளே. நல்லதும் அவளே கெட்டதும் அவளே. அம்ருதமும் அவளே விஷமும் அவளே. ஒளியும் அவளே இருளும் அவளே. நலமும் அவளே நோயும் அவளே. ஜனனமும் அவளே மரணமும் அவளே. அவளன்றி ஓர் அணுவும் அசையாது.

இப்பொழுது இந்த ஸ்ரீமாதா என்கின்ற வார்த்தையில் மறைந்து இருக்கக் கூடிய ஸ்ரீவித்யை ரகஸ்யம் என்பது “பஞ்சதஷி” மந்திரத்தைக் குறிப்பதாகும். பஞ்சதஷி மந்திரமானது மூன்று கூடங்களாக பிரிக்கப்பட்டிருக்கின்றது. வாக்பவ கூடம். மத்ய கூடம் மற்றும் சக்தி  கூடம். இந்த மூன்று கூடங்களும் அன்னையின் முழுமையையும் அந்த இடத்திலே வர்ணிப்பதாக அமைந்திருக்கின்றது. அன்னையின் உச்சி முதல் பாதம் வரை வர்ணிக்கப்படுகிறது. அப்பொழுது இந்த பஞ்சதஷி மந்திரம் ஸ்ரீமாதா என்ற ஒரு வார்த்தையிலே மறைபொருளாக இங்கு அருளப்பட்டிருக்கிறது. “மதி தாரயதி இதி மாதா” ஆத்மவித்யா, மஹாவித்யா, ஸ்ரீவித்யா, காமசேவிதா என்று பின்னால் இந்த நாமங்களிலே குறிப்பிடுவது போல அன்னையே அனைத்துமாக இருக்கின்றாள்.

அடுத்ததாக இந்த ஸ்ரீ என்கின்ற வார்த்தை குருவையும் குறிப்பதாகும். ஸ்ரீவித்யா பாரம்பர்யத்திலே குருவின் உதவியோடு ஒருவர் அன்னையின் பாதத்தை சென்று அடைய முடியும் என்பதால் ஸ்ரீமாதா என்பது தேவியையும், ஸ்ரீகுருவையும் அதாவது ஸ்ரீகுரு என்று சொல்லப்படுவது இங்கு ஸ்ரீவித்யை குருவை குறிப்பதாகும். எனவே இந்த ஸ்ரீமாதா என்கின்ற நாமமானது அனைத்து இயம்பும் சக்தியையும் வணங்குவதாகவும்., உன்னை சரணடைகின்றேன் தேவியே என்பதாகவும், அகிலாண்ட கோடி ப்ரமாண்டத்தை ஆளும் தேவியே உன்னை சரணடைகின்றேன் என்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

ஓம் அன்னையே ஆதிபராசக்தியே

அனைத்துள்ளும் புறமுமாய் ஸர்வ வ்யாபியாய்

எனை அரவணைக்கும் அன்னையே

அன்பும் கருணையுமாய்

ஆற்றலாய் ஆதரவாய் ஆற்றெழும் ப்ரவாகமாய்

எனை ஆட்கொள்ளும் அன்னையே

அருட்ப்ரகாச அன்னையே ஆத்மதத்வ அன்னையே

ஆகமவேத அன்னையே அருவாய் உருவாய் குருவாய்

அருள்மழை பொழியும் அன்னையே அன்பே அருள்சுனையே

ஆழியாம் இவ்வூழியை அடியேனும் கடந்திடவே

அருள்வாய் நின்பாத கமலம் அர்ப்பணித்தேன்

சரணம் அன்னையே ஓம் ஸ்ரீமாதா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *