நாமம் 2: ஸ்ரீமஹாராஜ்ஞீ

மஹா என்பது உச்சம் அல்லது இதற்கு மேல் எதுவும் இல்லை என்பதாகும். ராஜ்ஞீ என்றால் ஆளுபவள். பேரரசிகளின் பேரரசி அன்னை லலிதாம்பிகையே பேரரசிகளின் பேரரசி ஆவாள். இந்த பேரண்டம் என்கின்ற பிரபஞ்சம் ஒழுங்கமைப்புடன் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த ஒழுங்கமைப்பை நிர்ணயிப்பவள் அவளே. கர்மங்களுக்கு ஏற்ற பலனையும், பலனுக்கு ஏற்ற கர்மங்களையும் அளித்து அரசாட்சி புரிகின்றாள். பிறப்பையும், இறப்பையும் அவரவர் கர்மங்களுக்கு ஏற்ப நற்பலன்களையும் மற்ற பலன்களையும் அளித்து பேரியக்கங்களை ஆட்சி புரிகின்றாள். முதல் நாமம் தேவியின் உருவாக்கும் ஆற்றலையும், இரண்டாவது நாமம் அவளது ஆளுமையையும் குறிப்பிடுகின்றது. தெய்வீக ஒழுங்கமைப்பே அவளது ஆளுமை ஆகும். சகஸ்ரநாமங்கள் ஒவ்வொன்றும் ஒரு பீஜ மந்திரத்தை  மறைபொருளாகக் கொண்டுள்ளது என்பதைப் பார்த்தோம். நாமாக்களில் இருந்து பீஜமந்திரத்தை எடுப்பது என்பது அவ்வளவு எளிதல்ல.

முதல் நாமம் “பஞ்சதஷாஷரீ” எனில் இரண்டாவது நாமம் அதனுடன் “ஸ்ரீம்” இணைத்து சோடஷி மந்திரத்தை உணர்த்துவது. மாயா பீஜமாகிய ஸ்ரீம் அன்னையின் காக்கும் அதாவது “ஸ்ரீம்” இணைத்து சோடஷி மந்திரத்தை உணர்த்துவது. மாயா பீஜமாகிய ஸ்ரீம் அன்னையின் காக்கும் அதாவது Sustaining ஆற்றலைக் குறிப்பதாகும். சோடஷி மந்திரம் சந்திரனுடைய பதினாறு கலைகளைக் குறிப்பது. அதாவது பதினாறு கலைகள் என்பது அம்ருதகலை முதலிய பதினாறு கலைகள். சந்திரகலையை ஆள்பவர்கள் திதி நித்யா தேவிகள். ஒரு மனிதனுடைய காலம் சந்திர கலைகளுடனும், சூரிய கலைகளுடனும் தொடர்புடையது. காலத்தை ஆள்பவன் காலன் அதாவது மஹாசிவன் ஆவான்.

இப்பொழுது ராஜன்+அக்னி என்கின்ற வார்த்தையில் இருந்து ராஜ்ஞீ என்கிற வார்த்தை பெறப்படுகின்றது. ஸ்ரீம் என்ற பீஜாக்ஷரம் இந்த நாமாவில் மறைந்து இருப்பதால் ஸ்ரீமஹா என்கின்ற வார்த்தையை ஸ்ரீம்+அ+ஹ என்று பிரித்துக் கொள்ளலாம். அப்பொழுது “ஸ்ரீம்” என்பது மாயா பீஜம். “அ” என்பது ஒளி. “ஹ” என்பது பிரதிபலிப்பு. ஒளியைப் பிரகாசம் என்று சொல்வோமானால் பிரதிபலிப்பை விமர்சம் என்று அழைக்கின்றோம். ஒளியையும் விமர்சத்தையும் பிரிக்க முடியாது. தேவியே ஒளியாகவும் இருக்கின்றாள் அவளே இருளை அழிப்பவாளகவும் இருக்கின்றாள். அதனால் தான் பின்னால் வரக்கூடிய ஒரு நாமத்திலே “தமோபஹா” என்கின்றதும் “அஞ்ஞான த்வாந்த திபிகா” என்கின்ற நாமங்களும் குறிப்பிடப்படுகின்றது.

அடுத்ததாக பஞ்சதஷாக்ஷரி ப்ராணாயாமம் ஸ்தூலப்ராணாயாமம் என்று அழைக்கப்படுகின்றது. மூலாதாரம் முதல் ப்ரஹ்மஹ்ரந்தம் வரை இந்த ப்ராணசக்தியானது இந்த இடத்தில் இழுக்கப்படுகின்றது. மூலாதாரம் முதுகுத்தண்டின் கீழ்பகுதியில் உள்ளது. பிரஹ்மஹ்ரந்தம் தலையினுடைய உச்சியில் இருக்கக் கூடியது. சகஸ்ரார தளத்தைக் குறிக்கக் கூடியது. இப்பொழுது இந்த மஹாசோடஷி மந்திரத்தின் ப்ராணாயாமமானது கால் விரல் நுனிகளில் இருந்து தலைக்கு மேலாக பனிரெண்டு அங்குலம் வரை இருக்கின்றது. மஹாபிந்து என்று இதைக் கூறுகின்றோம். இந்த மஹாபிந்து வரையிலே ப்ராணசக்தியானது பரவி நிற்கின்றது.

இந்த ப்ரஹ்மஹரந்தம் என்பது இறைவனை அடையும் வாயிலாகும். இந்த நிலையே யோகிகளும், முனிவர்களும் எய்த முயற்சிப்பதாகும். நமக்கும் இந்நிலை சித்தியாக மஹாசோடஷி உபதேசம் பெற்றவர்கள் அதை முறையாக ப்ராணாயாமத்துடன் இணைத்து பயிற்சி செய்து வர மஹாப்ராணசக்தியானது தலைக்கு மேல் ப்ரஹ்மஹ்ரந்திரத்தைக் கடந்து உச்சிக்கு மேல் பனிரெண்டு அங்குலத்திற்கு வரையிலும் நீண்டு போகும். இந்த நிலையிலே ஒரு மனிதன் தன்னையே உணர்ந்து கொள்கின்றான். அஞ்ஞானம் என்கிற இருள் அகல்கிறது. தானே தேவியாக உணர்கிறான். “அஹம் ப்ரஹ்மாஸ்மி” “அயம் ஆத்மா ப்ரஹ்மஹ” என்ற உயர்ந்த தத்துவத்தைத் தனக்குள்ளாக உணர்கின்றான். இப்படிப்பட்ட ஒரு அழகிய, ஒரு உன்னதமான நிலையை நமக்குள்ளாக அளித்து ஆளுமை புரிபவள் மஹாசோடஷியாம் ஸ்ரீமஹாராஜ்ஞீ. “ஸ்ரீமஹாராஜ்ஞீ நமஹ”

ஆட்கொள்வாய் எனை நீயே தாயே

உனது அருள் பிரகாசம் என்னுள்ளே விளங்க

ஆட்கொள்வாய் எனை நீயே தாயே

உன்னிளம் பிள்ளையாம் பாலா

உன்னிளம் பிள்ளையாம் பாலா

என் நாபியில் இருந்து ப்ராணனை மேலேற்ற

உன்னிளம் பிள்ளையாம் பாலா

பத்தும் ஐந்துமாய் அக்ஷரம்

அடி முதல் முடி வரை ப்ராணனை மேலேற்ற

பத்தும் ஐந்துமாய் அக்ஷரம்

அடி முதல் முடி வரை ப்ராணனை மேலேற்ற

ஆட்கொள்வாய் எனை நீயே தாயே

ஸ்ரீம் என்றதனோடு இணைக்க

ஸ்ரீம் என்றதனோடு இணைக்க

உச்சிக்கு மேலாம் இறைவழியைக் காட்ட

ஸ்ரீம் என்றதனோடு இணைக்க

உச்சிக்கு மேலாம் இறைவழியைக் காட்ட

ஆட்கொள்வாய் எனை நீயே தாயே

உனது அருள் பிரகாசம் என்னுள்ளே விளங்க

ஆட்கொள்வாய் எனை நீயே தாயே

காலனை வென்றிட வேண்டும்

காலனை வென்றிட வேண்டும்

மஹாகாலனாம் உன் பதி பதம் சேர வேண்டும்

மஹாகாலனாம் உன் பதி பதம் சேர வேண்டும்

ஆட்கொள்வாய் லலிதாம்பிகை தாயே

ஆட்கொள்வாய் லலிதாம்பிகை தாயே

மஹாமேருவாய் என்னுடலில் உறைந்திடும் தாயே

ஆட்கொள்வாய் லலிதாம்பிகை தாயே

ராஜராஜேஸ்வரியே போற்றி

ஸ்ரீமஹாராஜ்ஞீ அன்னையே போற்றி போற்றி

ராஜராஜேஸ்வரியே போற்றி

ஸ்ரீமஹாராஜ்ஞீ அன்னையே போற்றி போற்றி

ஆட்கொள்வாய் எனை நீயே தாயே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *